Monday, 31 December 2012

புது வருடம்

வாழ்க்கை எனும் நன்செய் நிலத்தில்
தன் நம்பிக்கையை விதையாக விதைத்து
உதவும் எண்ணத்தை உரமாகப் பரப்பி
செழிப்பானச் சிந்தனையை நீராகப் பாய்ச்சி
சரியான உழைப்பைப் பயிராக வளர்த்து
தவறான செயல்களைக் களையாக எடுத்து
உடல் பயிற்சியுடன் ஆரோக்கியத்தை வேலியாக்கி
வளமான வருமானத்தை அறுவடை செய்து
வருடம் முழுதும் வாழ்நாள் முழுவதும்
மிகச் சிறப்பான வாழ்க்கை வழங்க
புத்தொளியோடு மலரட்டும் புதுவருடம்

புது வசந்தமாக வீசட்டும் புதுவருடம்
புது வழிகாட்டியாக வரட்டும் புதுவருடம் !!!

Sunday, 30 December 2012

நேரத்தோடு

வினாடிகளோடு நாமும் விரைவோம்
நிமிடங்களோடு நாமும் நீச்சலடிப்போம்
மணிகளோடு நாமும் மாற்றமடைவோம்
நாட்களோடு நாமும் நடப்போம்
வருடங்களோடு நாமும் வளருவோம்
நேரத்தோடு செயல் முடிப்போம்
நேரமில்லையெனும் அவதி நீக்குவோம் !!!

Sunday, 23 December 2012

கண்ணீர்

வலியை
வெளிப்படுத்தும் 
வழி !!!
விழி
பொழியும்
துளி !!!

Thursday, 20 December 2012

இயற்கை

இயற்கையாக
இருந்தால் இன்னலேது !!!
செயற்கையாக
வாழ்ந்தால் இன்பமேது !!!

Wednesday, 19 December 2012

இயற்கை

அழகு செழுமை
அளவோடு அனுபவித்தால் !!!
கேடு வறுமை
வரையின்றி அனுபவித்தால் !!!

Tuesday, 18 December 2012

இயற்கை



ஏற்றத் தாழ்வு
இல்லாமல்
வளம் பகிரும்
வள்ளல் !!!

Saturday, 15 December 2012

இயற்கை

அழகு தான்
அழிக்காத வரை !!!

Thursday, 6 December 2012

இயற்கை

பகல் இரவு
இரு முகங்கள்
இன்பம் துன்பம்
இரு அனுபவங்கள்
இரண்டும் இயற்கை
நில்லாத மறுசுழற்சி
துன்பத்தில் துவளாமல்
இன்பத்தில் மிதக்காமல்
வாழ்வில் உயரவேண்டும் !!!

Wednesday, 5 December 2012

இயற்கை

பிறப்பும் இறப்பும்
மாற்ற முடியாதது
இயற்கையின் வலிமை !!!
செயற்கை முயற்சி
கண்டுபிடிப்பு அனைத்தும்
அடங்கும் இயற்கையில் !!!
இயற்கையில் இயற்கை இயற்கை !!!

Monday, 3 December 2012

இயற்கை

அடர் மேகம் அழகாக அந்தி வானம் ஆள
வளர் நிலா இருள் நீக்க வலம் வர
வெளிர் நட்சத்திரம் அளவோடு வெளிச்சம் தர
அதிகாலை வரை விழிப்போடுக் காவல் தொடர 
கதிரவன் கண்ணுறக்கம் விழித்தெழுந்து கடல்  குளித்து
உற்சாகத்துடன் ஒளி வெள்ளம் பாய்ச்ச உயிர்கள் அனைத்தும்
புத்துயிர் கொண்டுப் புதுநாள் காண இயற்கையுடன்
இணை செல்ல உயிர் வாழ உணவு தேடி
உழைக்க வாழ்க்கைச் சக்கரம் வழி விட
பகல் முழுதும் பாடுபடப் பனித்துளி போல்
வியர்வை சொட்ட தண்ணீர் வந்து தாகம் தணிக்க
தென்றல் வந்து வியர்வை விலக்கப் பூமித்தாய்
உணவளி(ள)க்க  உயிர்கள் அனைத்தும் பசியாறப் பகல்
பொழுதும் உறங்கச் செல்லப் பகலவனும் படுக்கச் செல்ல
அடர் மேகம் அந்தி வானம் ஆள  துவங்குகிறது !!!

Friday, 9 November 2012

கஞ்சா


கவலை மறக்கக் கஞ்சா
மன அழுத்தத்திற்கு
க் கஞ்சா
நுரையீரல் கெடுக்கக் கஞ்சா
புற்றுநோய் கொடுக்க
க் கஞ்சா
குடும்ப சீரழிவுக்கு
க் கஞ்சா 
சாவை அழைக்கக் கஞ்சா
தேவையா கொடுமையான கஞ்சா ???

Saturday, 3 November 2012

வெற்றி

அருகில் நெருங்குவது போலத் தோன்றும்
பறக்கும் - தொட முடியாத வானமாய் !!!
தாகத்திற்கு அருந்தலாம் போல இருக்கும்
முடியாது - மறையும் கானல் நீராய்  !!!
நேரிலே நடப்பது போல இருக்கும்
மாறும் - உறக்கத்தில் காணும் கனவாய் !!!

விடாமல் முயன்று கொண்டே இருப்போம்
விரைவில் வெற்றியை விரட்டிப் பிடிப்போம் !!!

தேவர் திருமகனார்

தெய்வீக மனிதர் கிடைப்பது மிகவும் அதிசயம்
வீரத்துடன் விவேகமும் சேர்ந்திருப்பது அதனினும் அதிசயம்
பொறுமையுடன் வள்ளல் குணம் அதனினும் அதிசயம்
பிறப்பும் இறப்பும் ஒரே நாள் அதனினும் அதிசயம்
அனைத்திற்கும் சொந்தக்காரர் தேவர் தெய்வீக அதிசயம் !!!
அவரை வணங்குவோம் வழிநடப்போம் வாகை சூடுவோம் !!!
தேவரினம் மென்மேலும் வளர உயரப் பாடுபடுவோம் !!!

Saturday, 27 October 2012

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்

தேனினும் பழக இனிமையானவர்
பாலினும் உள்ளம் தூய்மையானவர்
சிங்கத்தினும் அடங்கா வீரமானவர்
கர்ணனினும் கொடை வள்ளலானவர்
எறும்பினும் உழைப்பில் சுறுசுறுபானவர்
கணினியினும் வேகம் நிறைந்தவர்
சூரியனினும் எதிரியைச் சுட்டெரிப்பவர்
நிலவினும் அன்பால் குளிர்விபவர்
நீரினும் தாகத்தைத் தணிப்பவர்
காற்றினும் சுவாசத்தைக் கொடுப்பவர்
வானினும் மனதில் பெரியவர்
நிலத்தினும் இடம் அளிப்பவர்
தேசியத்தையும் தெய்வீகத்தையும் கண்ணாக
மானத்தையும் மரியாதையையும் காத்த
மனித தெய்வம் தேவர் ஐயாவை
வான்புகழ வணங்கி ஆசி பெறுவோம்
பசும்பொன்னில் அனைவரும் ஒன்று கூடுவோம் !!!

Tuesday, 23 October 2012

தேவர் திருமகனார்

பசும்பொன்னில் விளைந்த சுத்தத் தங்கம்
பார் போற்றிப் புகழும் சிங்கம்
தேசியமும் தெய்வீகமும் இவரது அங்கம்
அறிவாற்றல் தெரிந்தது நாடு எங்கும்

சீமான் பிறந்தது தேவர் இனம்
மக்களுக்கு நன்மை செய்யும் மனம்
எடுத்த காரியத்தை வெற்றியாக்கும் குணம்
வணங்கி அருள் பெறுவோம் தினம் !!!

ரோஜாப்பூ

இதழ்களை விரித்தாய்
அழகாய்ச் சிரித்தாய்
வண்ணங்களில் மலர்ந்தாய்
எண்ணங்களில் நிறைந்தாய்
கூந்தலில் குடியேறினாய்
மாலைக்கு மணமாகினாய்
நேரமானதும் நினைவிழந்தாய்
இரவானதும் மறைவானாய்
மறுஜென்மம் உருவெடுப்பாய்
மறுசெடியில் ஜனனிப்பாய் !!!

Friday, 19 October 2012

மழை

மனதை நனைக்கும் மழை
மகிழ்ச்சியைக் கொடுக்கும் மழை
செழுமையை வழங்கும் மழை
செல்வதைச் சேர்க்கும் மழை 
வறட்சியை ஒழிக்கும் மழை 
வறுமையை அழிக்கும் மழை
அன்பாய்ப் பெய்யணும் மழை
அழிவில்லாமல் காக்கணும் மழை !!!

Wednesday, 17 October 2012

சொந்தமாக்கலாம்

பணம், நகை
வீடு, நிலம் மட்டுமல்ல
நினைக்கும் நல்லெண்ணங்களையும்
செய்யும் நற்செயல்களையும்
உதவும் நற்குணத்தையும்
மூளையிலிருந்து உருவாகும்
அனைத்துக் கற்பனைகளையும்
நமது சொந்தமாக்கலாம் !!!
கருத்துகளை அனைவரிடமும்
பகிர்ந்து பந்தமாகலாம் !!!

Tuesday, 16 October 2012

வாய்ப்பு

கிடைக்கும் போதுக் கட்டிப் பிடிக்கணும்
தூரப் போனா ஓடி அணைக்கணும்
தெரியலைனா சரியாத் தேடித் பார்க்கணும்
வரவுக்குத் தகுதியோடுக் காத்து இருக்கணும் !!!

Monday, 15 October 2012

நிதானம்

நிதானமாக ஓட்டிச் செல்வோம்
நீண்ட ஆயுளை வெல்வோம் !!!

Sunday, 14 October 2012

இரவு

நித்திரையைத் துணைக்குத் தேடும் 
களைப்புக் கரைந்து ஓடும் 
மனம் நிம்மதி நாடும்
இமையும் கண் மூடும் 
கனவு நிழல் ஆடும்
உடம்பும் தூக்கம் தொடும்
கவலை மற !!! தூக்கம் திற !!!

என்னவாகும் ???

அந்தப் பக்கம்
இந்தப் பக்கம்
பார்த்தும் தயக்கம்
உடம்பும் வியர்க்கும்
இருந்தும் நெருங்கும்
விருந்தும் வருந்தும்
அருகில் நிற்கும்
உருவில் வெட்கம்
சிரித்தால் சொர்க்கம்
நினைத்தால் திக்கும்
முயற்சி எடுக்கும்
பலன் கொடுக்கும்
கைகள் கோர்க்கும்
மெய்கள் சேர்க்கும்
கட்டி அணைக்கும்
முத்தம் கொடுக்கும்
அடுத்து நினைக்கும்
கதவு திறக்கும்
தூக்கம் கெடுக்கும்
கனவில் மயக்கம்
மனக்கண் விழிக்கும்  
இதயம் தவிக்கும்
நிழலும் நிஜமாகுமா ???
கனவும் நனவாகுமா ???

Tuesday, 9 October 2012

எங்கே

மூச்சு விட்ட அனல் காற்று எங்கே
வாயில் உதிர்த்த  வார்த்தை எங்கே
கடலில் விழும் நிறமில்லா மழைத்துளி எங்கே
லஞ்சம் வாங்காத அரசு அலுவலகம் எங்கே
புறம் பேசாதப் புதிய ஜீவன் எங்கே
அளக்காமல் வாரி வழங்கிய வள்ளல் எங்கே
எதிர்பாராமல் உதவி செய்யும் உள்ளம் எங்கே
கடவுளின் மறு உருவான கருணை எங்கே
எங்கே??? எங்கே??? எங்கே???

Thursday, 4 October 2012

புகைப்பழக்கம்


புகைக்கும் போது மனதிற்கு பேரின்பம்
புண்ணாக்கும் போது நோய்க்கு ஆனந்தம்
புற்றாக்கும் போது வலிக்கு வளைகாப்பு
புதைக்கும் போது குடும்பத்துக்கு பேரிழப்பு !!!

Monday, 1 October 2012

முதியோர் தினம்

அறிவில் முதிர்ந்தவர்கள்
அன்பில் முதிர்ந்தவர்கள்
பண்பில் முதிர்ந்தவர்கள்
பக்தியில் முதிர்ந்தவர்கள்
சக்தியில் முதிர்ந்தவர்கள்
சாதனையில் முதிர்ந்தவர்கள்
அனுபவத்தில் முதிர்ந்தவர்கள்
முதிர்ச்சியான ஆலமரம் மட்டுமே
முழுமையான நிழல் தரும்
முதியோரை ஒதுக்காமல்
அன்பாய் அரவணைப்போம் !!!
அனுபவம் பெறுவோம் !!!
தலை வணங்குவோம் !!!

புகைப்பழக்கம்


அருகிலிருப்பவரையே மறைக்கும் புகை
ஆபத்தைக் கொடுக்கும் வகை
இடுகாட்டில் எரிக்கும் வரை
ஈகை காட்டும் இருட்டறை
உறவுகள் இன்பத்தை அழிக்கும்
ஊரும் உன்னைப்  பழிக்கும்
எங்கும் குடிக்கும் பழக்கம்
ஏனையவரையும் துணைக்கு அழைக்கும்
ஐயமில்லாமல் நிறுத்தணும் புகையை
ஒரு நிலைப்படுத்தணும் மனதை
ஓசியானாலும் வெறுக்கணும் புகைப்பிடியை !!!

Thursday, 27 September 2012

காளை

சாதனைக்கு வளரணும் காளை
சோதனைக்குப் பயந்தாக் கோழை

Monday, 24 September 2012

தடம்

கடற்கரையில் எத்தனைப் பாதத்தடங்கள்
உன் பாதத்தின் படிவங்கள்
மனதில் நிற்கும் வடிவங்கள்
உன் வருகையை அறிந்தேன் !!!
புரியவில்லை
எனக்காக வந்து சென்றாயா ???
மாற்றானுடன் மகிழ்ந்து சென்றாயா ???

Sunday, 23 September 2012

தோல்விப் பாடம்

பாடம் படித்தால் மட்டுமே
தேர்வில் வெற்றி  பெற முடியம் 
பள்ளிப் பாடம் இது !!!
தோல்வி அடைந்தால் மட்டுமே 
வாழ்வில் வெற்றி அடைய முடியும்
வாழ்க்கைப் பாடம் இது !!!

Tuesday, 18 September 2012

பிள்ளையார் சதூர்த்தி

அதிசய உருவம் கொண்ட ஐங்கரனே
துதிக்கையோடுத் துன்பம் தீர்க்கும் சிவமகனே
தாய்ப்பற்று அதிகம் கொண்டத் தலைமகனே
ஞானப்பழத்தை அறிவால் அணைத்த ஆண்டவனே
எச்செயல் துவக்கத்திலும் முன்னிற்கும் மூத்தவனே
பக்தர்களைப் பகையிலிருந்து காக்கும் பரம்பொருளே
சதூர்த்தி நாளில் சங்கடங்கள் தீர்த்து
நலத்துடன் இருக்க மக்களை ஆசிர்வதித்து
அனைத்துச் செல்வங்களையும் அள்ளிக் கொடுத்து
அருள்புரிய வேண்டி சண்முகன் சகோதரனே
உன்னை வணங்கிப் பாதம் பணிகிறோம் !!!

Sunday, 16 September 2012

வேண்டாம் தற்கொலை

நான் படைக்கவில்லை இந்த உடம்பை
எனக்கு உரிமை இல்லை அழிப்பதற்கு
நான் கொடுக்கவில்லை இந்த உயிரை
எனக்கு உரிமை இல்லை எடுப்பதற்கு
அவசரமான முடிவு அறிவை அடக்கும்
நிதானமான சிந்தனை அழிவைத் தடுக்கும்
பிரச்சனை எதுவானாலும் ஆறவிடு
நேரம் எடு தெளிவு பெறு முடிவு எடு
தற்கொலை எண்ணம் தரணியில் இருக்காது
தைரியமான வாழ்க்கைக் கை வசப்படும்
தற்கொலைக் கண்ணாடியைத் தவற விடு
சுக்கு நூறாகட்டும் தூள் தூளாகட்டும்
நம்பிக்கைக் கண்ணாடியை உறுதியோடு பார்
உலகை வாழ ஆசை உள்ளதகாக் காட்டும்
புத்துணர்ச்சி பெறு புது வாழ்வு துவங்கு
 
மானம் போனாலும் ஊனம் ஆனாலும்
நம்பிக்கையை நட்டு வை நல்மரமாக   
முயற்சியோடு உழைப்பெனும் தண்ணீர் ஊற்று
ஆலமரமாக விழுதுகளுடன் பரந்து விரிந்து
பார்புகழப் பரம்பரை வாழுமுன் நிழலில் !!! 
தோன்ற வேண்டும் எண்ணம் மனதில்
இப்படி எல்லாம் எழுதுபவனே இருக்கையில்
நான் ஏன் தற்கொலை செய்யணும்???

Saturday, 15 September 2012

எதில் அழகு

பெண்ணவளின் கண்ணசைவிலா
பிஞ்சதுவின் புன்னகையிலா
ஆணவனின் வீரத்திலா
மயிலதுவின் சிறகிலா
வானவிலதுவின் வண்ணத்திலா
நிலவதுவின் வெண்ணொளியிலா
மொட்டதுவின் மலர்ச்சியிலா
அருவியதுவின் வீழ்ச்சியிலா
வயலதுவின் பசுமையிலா
தீபமதுவின் சுடரொளியிலா
மனமதுவின் நல்லெண்ணத்திலா
நாக்கதுவின் நாணயத்திலா
செயலதுவின் சிறப்பிலா
உழைப்பதுவின் உண்மையிலா
எதில் அழகு ???

Friday, 14 September 2012

இனிமை - தனிமை - கொடுமை

அவள் வந்த பின் சேர்ந்தது
அவள் சென்ற பின் வந்தது
அவள் செல்லும் போது சிரித்தது
சும்மா.....ஹி ஹி ஹி !!!

Sunday, 9 September 2012

உதவி

உதவி செய்வோம்
ஊனமுற்றவருக்கும்
உறவிழந்த முதியவருக்கும்
உறவில்லா அனாதையர்க்கும்
கல்விக்குக் காசில்லாக் கண்மணிகளுக்கும் !!!

பெண்மை

ஆசை எனும் அலை பாய
பாசம் எனும் படகு ஆட
ஆண்மை எனும் அனல் விழ
மோகம் எனும் மேகம் சூழ
பேதை எனும் பெயர் வர
கூச்சம் எனும் குரல் எழ
காமம் எனும் கதிரை
தாகம் எனும் தவிப்பை
பேராண்மை எனும் பெண்மை
மேன்மை எனும் மென்மையோடு
கட்டுப்பாடு எனும் கருவியால்
ஆசை எனும் அதை அடக்கம் செய்கிறது !!!

Wednesday, 5 September 2012

லட்டு

உதிரிப் பூந்திகள் தனித் தனியாயிருக்க 
உறவைத் தேடி உள்ளம் வாட
நெய் எனும் சுவையூட்டும் விருந்தாளி 
நெருக்கத்தை ஏற்படுத்த நேரம் ஆக
ஒன்றுக்கொன்று கைப்பிடிக்க  உருண்டை
வடிவில் உருவானது இனிப்பான பந்தம் !!! 
தேவையானத் துட்டு செலவு செய்தால்
அனைவர் நாவுக்கும் இது சொந்தம் !!!

Monday, 3 September 2012

ஆசிரியர்

வார்த்தைகளைத் தெளிவாகவும்
அர்த்தங்களை அழகாகவும்
சூத்திரங்களைச் சுருக்கமாகவும்
பாடங்களைக் கருத்தோடும்
புரியாததைப் புன்முறுவலோடும்
அறியாததை அகமகிழ்வோடும்
பணிவைப் பக்குவமாகவும்
பண்பாட்டை நிச்சயமாகவும்
முயற்சியை முக்கியமாகவும்
மரியாதையை மகிழ்ச்சியோடும்
கற்றுக் கொடுக்கும் கல்விக் கடவுள் !!!

Wednesday, 29 August 2012

பார்க்காதவன்

வீட்டில் மனைவியை அழகாய்ப் பார்க்காதவன்
வெளியில் வேசியை வெறுப்பாய் பார்க்காதவன்
சமுதாயத்தில் மானம் மரியாதையைப்  பார்க்காதவன்
நண்பரின் அறிவுரையைப் ஆராய்ந்து பார்க்காதவன்
அரசின் விளம்பரப் பலகையைப் பார்க்காதவன்
காண்டம் எனும் பாதுகாப்பைப் பார்க்காதவன்
எந்த விளைவையும் பெரிதாய் பார்க்காதவன்
வாழ்வில் எய்ட்ஸ்-ஐ நிச்சயம் பார்ப்பானோ ???

Monday, 27 August 2012

பருவ காலங்கள்

கோடையில் விழும் கடும் இடியில் 
வந்து விழுந்தாய் என் மன மடியில் 
கார்காலத்தில் பெய்யும் மழைத் துளியில்
கண்காட்சியாய் நிறைந்தாய் என் கரு விழியில்
வசந்தத்தில் வரும் தென்றல் காற்றில் 
கலந்து ஓடினாய் என் இரத்த ஊற்றில்  
பனிக் காலத்தில் பொழியும் பனியில்
உரமாக உறைந்தாய் என் உயிர் நுனியில்
இலையுதிர் காலத்தில் உதிரும் இலையில் 
சருகாய் உதிர்ந்தாய் என் இதய வலையில்
இனியக் காலச்சக்கரம் மீண்டு(ம்) வருமென்று 
காத்திருக்கிறேன் என் உயிர் கொண்டு !!!

Sunday, 26 August 2012

விலை

பொருளுக்கு மதிப்பு கொடுக்கும் விலை
அதிகமாய் விற்பது வியாபாரியின் கலை
நியாயமான விற்பனை நிச்சயம் கற்பனை
விலை உயர்த்தி விற்பவருக்கில்லை மனம்
வாடிக்கையாளர் உள்ளம் வருந்தும் தினம்
அனைத்து வணிகத்திலும் வேண்டும் நேர்மை
விற்கும் பாலில் வேண்டும் தூய்மை
அநியாய விற்பனையில் பணம் சேரும்
மனநியாய விற்பனையில் அருள் சேரும்
உழைப்பில் அடையலாம் உயர்ந்த நிலை
பொருளுக்குத் தேவைப் பொருத்தமான விலை
விரைவில் பணம் சேர விலையுயர்த்தாதே
பணத்தோடு பாவமும் படிப்படியாய்ச் சேரும்
வணிகம் பண்ணனும் சரியான விலையில்
வாழ்க்கை உயரும் தெளிவான நிலையில்
ஒவ்வொரு பொருளுக்கும் உகந்த விலை
வாங்குபவர் மனதில் இன்ப அலை
பொருள் விலையுடன் சரியான லாபமும்
வணிக நெறிகளையும்  வலிமையாக இணைத்து
வீதிக் கடைகளில் விற்பனை செய்வோம்
வியாபாரத்தின் நேர்மையை கடைப் பிடிப்போம்
மக்கள் மனதார வாங்க வாழ்த்த வழி செய்வோம் !!!

Tuesday, 14 August 2012

சுதந்திர தினம்

சூரியனுக்கு இரவில் சுதந்திரமில்லை
சந்திரனுக்கு பகலில் சுதந்திரமில்லை
பளிச்சென்ற பகலிலும் பனிவிழும்
இரவிலும் முப்பொழுதிலும் எப்பொழுதிலும்
இந்தியனுக்கு சுதந்திரம் உண்டு !!!
ஆங்கிலேயனிடம் அடிமையானது அறியாமையினால்
வளமையை விட்டது புரியாமையினால்
மிஞ்சியவற்றை அந்நியனுக்கு விற்காமல்
இநதிய வளர்ச்சிக்கு இயற்கையை
அழைத்து மரியாதை செய்து
வளம் பெருக்கி வானுலகம்
போற்ற வல்லரசாக்கி இந்தியாவை
இமயமெனத் தூக்கி நிறுத்துவோம்
பெற்ற சுதந்திரத்தைப் போற்றுவோம்
அனைவருக்கும் பயனுள்ளதாய் மாற்றுவோம் !!!

சுதந்திர தினம்

அடிமைச் சிறையில் இருந்து
விடுபட்டுச் சுதந்திரமாய்ப் பூமித்
தாயின் மடியில் இந்தியா
எனும் பிள்ளை பிறந்தநாள் !!!

சுதந்திர தினம்

சுபாஸ் போன்ற சூரியன்கள்
காந்தி போன்ற கண்ணியவான்கள்
நேரு போன்ற நியாயவாதிகள்
போராடிப் பெற்றச் சுதந்திரத்தை
போற்றி வணங்குவோம் இத்தினத்தில் !!!

சுதந்திர தினம்

லஞ்சமில்லா அரசு அலுவலகங்கள்
வஞ்சமில்லா நாடாளும் அரசியல்வாதிகள்
பஞ்சமில்லா வீட்டுக் குடிமக்கள்
பயமில்லா வாழ்க்கைப் பாதைகள்
திண்டாட்டமில்லா வேலை வாய்ப்புகள்
கொண்டாட்டமில்லா போதைப் பொருட்கள்
இதெல்லாம் பெற வரம்
தரவேண்டும் சுதந்திர தினம் !!!

Friday, 10 August 2012

கண்ணீர்

கண்ணுக்குத் தெரியாத
வலியையும் வேதனையையும்
வெளிப்படுத்தக் கண்களால் 
உருவாக்கப்படும் தண்ணீர் !!!
உற்பத்தியான உடன்
அருவியாய்க் கொட்டும்
கன்னம் எனும்
மலை முகடுகளிலிருந்து !!!
இவ்வருவியில் மட்டும்
நீர்வரத்துக் குறைய  
விரும்பும் மனம் !!!
வறண்ட அருவி
வருத்தமில்லா வாழ்வு !!!
நீரில்லா அருவி
நிம்மதியான வாழ்வு !!!
ஆனந்தம் எனும்
அருவி அவ்வப்போது
அளவோடு வந்தால்
அருமையான வாழ்வு !!!

Tuesday, 7 August 2012

Saturday, 4 August 2012

நண்பர்கள் தினம்

நகைக்கும் நட்பு
பகைக்கும் நட்பு
கொடுக்கும் நட்பு
எடுக்கும் நட்பு
கெடுக்கும் நட்பு
தடுக்கும் நட்பு
அடிக்கும் நட்பு
அணைக்கும் நட்பு
மறக்கும் நட்பு
மதிக்கும் நட்பு
அனைத்துக்கும் காரணம் நட்பு !!!
நட்பில் பெறலாம் பலம்
முடிவில் யாவையும் நலம்
கொண்டாடும் இத்தினமோ சுகம் !!!

நண்பர்கள் தினம்

தாய் இல்லாமல் பிள்ளை இல்லை
நண்பர் இல்லாமல் வாழ்க்கை இல்லை !!!

நண்பர்கள் தினம்

இல்லாத போது கொடுக்கவும்
அழும் போது அணைக்கவும்
விழும் போது எழவும்
வாழும் போது வாழ்த்தவும்
கூடிய உன்னத நட்பால்
உள்ளங்கள் கொண்டாடும் தினம்

மகிழ்ச்சியில் திளைக்கும் மனம் !!!

Tuesday, 31 July 2012

நன்றி

உதவியதற்கு உடனடியாக
உதடுகளில் உதிப்பது !!!

Tuesday, 24 July 2012

கிருமி

உத்தரவு இல்லாமல் உடம்பில் நுழைந்து  
உண்ணும் உணவில் உடல் வளர்த்து
உயிரைக் குடிக்கும் நம்பிக்கைத் துரோகி !!!

Friday, 20 July 2012

வாரிசு

குழந்தை இல்லாத
குறையில் தினமும்
மனம் நோகாமல்
பரந்த மனதுடன்
அனாதை இல்லம்
சென்று பிடித்த  
பிள்ளையை  அணைத்தெடுத்து
அன்பு காட்டி
வளமான வாழ்வு
கொடுத்து சரியான
வாரிசை உருவாக்கலாம் !!!
வாழ்வில் நிம்மதி பெறலாம் !!!

Wednesday, 18 July 2012

காதல்

இதயம் துடிப்பதற்கு
மட்டும் தானே ???
உன்னால் பறக்கிறதே !!!

Sunday, 15 July 2012

பிளாஸ்டிக்

பிறந்தாலும் தொல்லை
பிணமானாலும் தொல்லை !!!

Thursday, 12 July 2012

உன்னைப் போல் ஒருவன்

நான் தோற்கப் பிறந்தவன் அல்ல
வெற்றியை நோக்கி விடாமல் ஓடுபவன் !!!

Tuesday, 10 July 2012

கோபம்

கோபத்தைக் கொல்வோம்
வாழ்க்கையை வெல்வோம் !!!

Sunday, 8 July 2012

பொழுதுபோக்குக் காதல் ???

கண்ணில் துவங்கி
அன்பில் மயங்கி
கனிவில் கனிந்து
அணைப்பில் அயந்து
பேச்சில் வியந்து
பணத்தை இழந்து
நேரம் கடந்து
முடிவில் பார்த்தல் மணி ஐந்து !!!
வீட்டுக்கு ஓட வேண்டும் பயந்து !!!
நோ லாஜிக் !!! சும்மா !!!

Friday, 6 July 2012

வேண்டும் ஈழம் - தமிழ் ஈழம் - தனி ஈழம்

வெந்து வீணான விளை நிலங்கள்
வெறுமையாய் இருக்கும் வெடியில் வீழ்ந்த வீடுகள்
குண்டுகளால் சிதைந்த வாகனம் பார்க்காத சாலைகள்
கட்டடம் களவு போன மருத்துவ மனைகள்

ஆதிகால மனிதர்களாய் உடுக்க உடுப்பின்றி
பிச்சைக்காரர்களாய் உண்ண உணவின்றி
அனாதைகளாய் அன்பாய் அணைக்க உறவின்றி
அடிமைகளாய் அவதியுடன் சுதந்திர உணர்வின்றி
கொலைக் கைதிகளாய் விடுதலை நீதியின்றி
பருந்துக்குப் பலியாவோமோ எனும் பயத்தில் குஞ்சுகளாய்     
கம்பி வேலிகளுக்கு நடுவில் கவலையோடு
முள் வெளிகளுக்கு மத்தியில் முகவரியில்லாமல்

குழந்தை அழுகுரல் ஆங்காங்கே தாயைத் தேடி
மனைவி ஓலம் ஊரெங்கும் கணவனைத் தேடி
பெண் விசும்பல் வீடெங்கும் தந்தையைத் தேடி
முதியோர் கதறல் வீதியெங்கும் பிள்ளையைத் தேடி

குருவிக்கு நல்ல கூடுண்டு தங்க
சிங்கத்துக்கு குகையுண்டு ஓய்வு எடுக்க
மீனுக்கு நீர் நிலையுண்டு வாழ
ஐந்தறிவு ஜீவனுக்கு அமைதியான இடமுண்டு
ஆறறிவு மக்களுக்கு அணுவளவில் உறைவிடமில்லை  
 
 
நெஞ்சைப் பிளக்கும் வஞ்சகத் திட்டம்
அப்பாவிகளைக் கொல்ல அடுக்கடுக்காய் ஆலோசனை
பக்கத்து நாடுகளுடன் படுகேவலமான பரிபாலனை
பாலில் விஷம் கலக்க பன்முகப் பேச்சு

ஆண் மகனை அடித்து
அசைய முடியாமல் அம்மணமாக்கி
கண்ணைக் கட்டி காவளித்தனமாக
பின் புறமிருந்து பிடரியில்
துப்பாக்கியால் சல்லடையாகத் துளைத்து

தமிழ்ப்பெண் மகளைத் தரமில்லாமல்
மனிதாபமில்லாமல் மானபங்கப்படுத்தி
தன் தாய் மனைவி மகள் அக்கா தங்கையாக
நினைக்காமல் அட்டூழியம் செய்து
சின்னாப் பின்னமாகச் சிதைத்து
சித்திரவதை செய்து பிணமாக்கி

ஒன்றும் அறியாக் குழந்தைகளை
துப்பாக்கி முனையில் தூங்கவைத்து
துணியில்லாமல் துவம்சம் செய்து
உணவில்லாமல் உருக்கி எடுத்து
அன்னை அன்பில்லாமல் அரவணைப்பிலாமல்
அனாதைகளாக்கி அடிமைகளாக்கி

வெள்ளைக்கொடி காட்டி வந்த வேந்தர்களை
வெடிகுண்டு போட்டு வேரோடு
வெற்று உடல்களாக சிதறச் செய்து
போர் மரபை மீறியப் பொட்டைகள் (நரிகள்)
வெறி நாய்கள் சொறி நாய்கள்

தவறான வழியில் தமிழ் மக்களை
தகுதியல்லாத கயவர்கள் தடுமாறச் செய்தது
தோல்வியல்ல சரியான துவக்கம் தான்
வெற்றி திலகத்தை வேகமாக வென்றிட
வேற்று மனமாக இல்லாமல் வேற்று நாடு
எனும் மாறுபட்டக் கருத்தில்லாமல் தமிழன்
தரணியில் எங்கிருந்தாலும் ஒன்றாக இணைந்து
மாற்றுக் கருத்துக்கு செவி சாய்க்காமல்
மாற்று எண்ணமுள்ள செந்தமிழ் மக்களை
ஒரே கருத்தில் ஒருங்கிணையச் செய்து
உலகம் உண்மையை உணர உழைத்து
ஐ.நா-வை அணுகி அநியாயத்தை எடுத்தியம்பி
தமிழ் ஈழத்தின் முக்கியத்தை முன்வைத்து

வாதாடி நீதியை நிலை நாட்டி
வாழையடி வாழையாகத் தமிழர்கள் தனி நாட்டில்
நிம்மதியாக நிர்பந்தமின்றி வாழ
சுதந்திரமாகச் சுற்றி வாழ
உற்சாகமாக உழைத்து வாழ
சகலமும் பெற்று சந்தோசமாக
வாழப் பெற வேண்டும் தனி ஈழம் !!!
தமிழர் ஈழம் !!! தரமான ஈழம் !!! தன்னிகரில்லா ஈழம் !!!
ஒன்று படுவோம் !!! தோள் கொடுப்போம் !!!
வென்றிடுவோம் !!! ஈழம் பெறுவோம் !!!

Thursday, 5 July 2012

தோல்வி

விஷயம் இருக்கிறது ஒவ்வொரு தோல்வியிலும் 
விஷமாக நினைத்து உயிரை விடாதே
விஷயத்தை அறிந்து தெளிந்து கொண்டால்
விருதுகள் பல நம்மைத் தேடி வரும்
விழுதுகளாய் உன் வம்சம் வளம் பெறும் !!!

Wednesday, 4 July 2012

சாலை விபத்து - விதிகள்

சாலை விதிகள் சாவைக் குறைக்கும் சக்திகள் !!!

விபத்தைத் தடுக்கலாம் விதிகளை மதித்தால் !!!

தலைக்கவசம் தன்னுயிர் காக்கும்
தன்னுயிர் தன்னுறவு காக்கும் !!!

போதையில் வாகனம் ஓட்டுவது 
பயணிகளுக்குத் தகனம் காட்டுவது !!!

போதையில்லா  வாகன ஓட்டுதல்  
விபத்தில்லாப் பாதையைக் காட்டுதல்  !!!

சாலை விதிகளை மதிப்போம்
சந்தோசமான பயணத்தைக் கொடுப்போம் !!!

சாலை விதிகளை மதிப்போம்
வரும் சங்கடங்களைத் தடுப்போம் !!!

Monday, 2 July 2012

நீ தானே என் பொன் வசந்தம்

நீ தானே என் பொன் வசந்தம்
நீங்காத நினைவுகளே நம் காதல் சுகந்தம்
நீ தானே என் கண் விழி
நீங்காத நினைவுகளே நம் கனவு மொழி
நீ தானே என் இதய துடிப்பு
நீங்காத நினைவுகளே நம் உறவின் பிடிப்பு
நீ தானே என் வாழ்க்கைப் பாதை
நீங்காத நினைவுகளே நம் பிரிவில் போதை
நீ தானே என் வாழ்வின் சிகரம்
நீங்காத நினைவுகளே நம் அன்பின் அகரம்
நீ தானே என் வலிக்கு மருந்து
நீங்காத நினைவுகளே நம் மனதுக்கு விருந்து
நீ தானே என் பொன் வசந்தம்
நீண்ட காலம் வாழ வேண்டும் நம் காதல் மகரந்தம் !!!

Wednesday, 27 June 2012

கணக்கு

சரியாகப் போட்டால் தப்பாகாது
தப்பாக போட்டால் விடையாகாது
விடை இல்லையென்றால் மதிப்பாகாது
மதிப்பு இல்லையென்றால் உயர்வாகாது
உயர்வு இல்லையென்றால் வாழ்வாகாது
நல்ல வாழ்வு வேண்டுமா ???
சரியாகப் போடு கணக்கை !!!
சும்மா !!! ஜாலிக்கு !!!

Tuesday, 26 June 2012

நாகரிகம்

அன்பை அளவோடும்
அழுவதை அமைதியாகவும்
சிரிப்பதை சிக்கனமாகவும்
வார்த்தைகளை அளந்தும்
இயற்கையை செயற்கையாகவும்
இயல்பை இல்லாததாகவும்
செய்வதா நாகரிகம் ???

Monday, 25 June 2012

காதல் ரசனை

அழகை ரசிக்கலாம் அளவில்லாமல்
உன்னைக் கூட அதிக நேரம் ரசிக்கிறேனே ???
ஓ ! காதல் தான் காரணமோ ???
சும்மா .... ஹஹஹஹா !!!

Thursday, 21 June 2012

கோபம்

நவரசங்களில் இதைக் குறைத்து விட்டால்
வாழ்க்கை முழுதும் கிடைக்கும் பழரசம் !!!

Wednesday, 20 June 2012

நிழல்

பாகுபாடு இல்லாமல் அனைத்திற்கும்
ஒளியினால்  கிடைக்கும் மறு உருவம் !!!

Monday, 18 June 2012

விமானம்

 யார் சொன்னது மீனுக்குத் தண்ணீர் மட்டுமே வாழ்விடமென்று ???
ஆகாயத்தில் மீன் அற்புதமாய் பறக்கிறதே !!!

Sunday, 17 June 2012

பேஸ்புக் காதல்

பேஸ்புக்கில் பார்த்தேன் இந்தப் பேதையை
அவள் நட்பை பெற ஆசைப்பட்டேன்
நயமாய் add request ஒன்றை அனுப்பினேன்
acceptence-ஐ அரை மணிகொருமுறை தேடினேன்
ஆறு நாட்கள் ஆகியும் ஆறுதலான answer இல்லை  
ஆறு வருடமாக கடந்தது நெஞ்சை கனமாக்கியது   
ஏழாவது நாளில் திறந்தது அந்த ரோஜா தோட்டம்
பூக்களால் நிறைந்தது என் மன வாட்டம்
நாளொரு like-க்கும் பொழுதொரு comments-சும்மாக 
நட்பு என்பது நல்லதொரு அன்பானது
அன்புக்கு மகுடமாய் பூத்தது புதுக்காதல்
படங்கள் பரிமாற்றம் பரிச்சியமானது
இரவு மட்டும் கண்ணில் பட்ட பேஸ்புக்
கைபேசியில் முந்தியது முக்கியமானது
எதிலும் பெண்களுக்கே முன்னுரிமை
காத்திருந்தேன் அந்த கனவுச் செய்திக்காக
காணவில்லை அந்தக் கன்னியிடமிருந்து
அழகாய் திட்டினேன் அந்த ஓவியத்தை
அருமையாய் புகுத்தினேன் ஆசையை
கனிவாய் வெளிப்படுத்தினேன் காதலை
ஆசையாய் post செய்தேன் என் மனதை wait செய்தேன்
கன நேரத்தில் கிடைத்தது பதில் ஓவியம்
அந்த யுவதியும் காத்திருந்தாள் போல 
படத்தில் இருந்தது படபடக்கும் இதயம்
திறந்தாள் இதயத்தை பறந்தாள் காதல் வானில் 
அங்கே காத்திருந்தது என் இதயம்
இணைந்தது இதயம் வந்தது புது உதயம்
பின்னாளில் பேஸ்புக்கில் profile படம் மாறியது
என்னில் அவள் அழகும் அவளில் என் ஆண்மையும்
உயிரில்லா பேஸ்புக்கில் உருவானது புது உறவு
உறவை மறவோம் வாழ்நாள் முழுதும்
நன்றி சொல்வோம் பேஸ்புக்கிற்கு !!! 
தொடர வேண்டும் இதன் சேவை
கிடைக்க வேண்டும் users தேவை !!!

Thursday, 14 June 2012

இரத்த தானம்

தேவைக்குக் கொடுக்கலாம் குருதி
மோட்சம் பெறலாம் உறுதி !!!

Tuesday, 12 June 2012

சத்தம்

அமைதியின் அருமையை அறிவுறுத்துவது !!!

கவிதை

கற்பனை
விளைநிலத்தில்
தைமாதம் !!!

Thursday, 7 June 2012

வெயில்

சூரியனின் சூடான பிள்ளை
கொஞ்ச இயலாத கிள்ளை !!!
சுட்டெரிக்கும் வளர்ப்புடன் மழலை
இது தேடவைக்கும் நிழலை !!!

இன்டர்நெட்

சிலந்தியை விட விவரமாகப் பின்னப்பட்ட வலை
தகவல்களை விரைந்து கொடுக்கும் தங்க அலை !!!

வேலை

நம் வயிற்றுக்கு வேலை கொடுக்க
நாம் பார்க்க வேண்டும் வேலை !!!

Wednesday, 6 June 2012

முடியுமா ???

தண்ணீரைக் கயிறால் கட்டப் பார்த்தேன்
கண்ணீரைக் கண்ணுக்குளே அடக்கப் பார்த்தேன்
விண்மீனை வலை வீசிப் பிடிக்கப் பார்த்தேன்
கடல் மீனை விரல் விட்டு எண்ணப் பார்த்தேன்
அழகான அருவியை அணைக்கப் பார்த்தேன்
கனலான நெருப்பை நறுக்கப் பார்த்தேன்
உயர்கின்ற வயதைக் குறைக்கப் பார்த்தேன்
பிரிகின்ற உயிரைப் பிடிக்கப் பார்த்தேன்
முடியவில்லை !!! வழி என்ன தெரியவில்லை !!!
விவரம் தெரிந்தும் விவகாரமான முயற்சி !!!

Monday, 4 June 2012

அழகு நிலா

கொடுப்பது
வெளிச்சம் மட்டுமல்ல
உடம்பில் குளிர்ச்சி
மனதில் மகிழ்ச்சி
நினைவில் நெகிழ்ச்சி
உறவில் கிளர்ச்சி
வாழ்வில் வளர்ச்சி !!!

மானிட்டர் - மானிட்டர்

தெளிவாய்க் காட்டும் இந்தக் கணினியின் பகுதி
தெளிவை ஓட்டும் இந்தத் திரவத்தின் மிகுதி !!!

Saturday, 2 June 2012

காதலா ???

மனசோடு மனசு
இளசோடு இளசு
பரிவோடு பரிவு
கனவோடு கனவு
உறவோடு உறவு
பிரிவோடு பிரிவு
நினைவோடு நினைவு !!!


Friday, 1 June 2012

தவிப்பு

டிவி சீரியலில் நாளை என்னவாக இருக்கும் என்பதை அறிய - தாய்க்குலம்
டாஸ்மாக் கடை எப்போது திறக்கப்படும் என்று - குடிமகன்
எப்பொழுது பாய் பிரண்ட் பைக்கில் பிக்-அப் செய்வான் என்று - இளைஞி
வகுப்பறை முடியும் கணத்தை எதிர்பார்த்து - கல்லூரி மாணவன் !!!
எனக்குத் தெரிந்த சில மேலே உள்ளவை
உங்களுக்குத் தெரிந்தவற்றையும் கீழே உள்ள comments-ல் எழுதுங்கள் !!!

Monday, 28 May 2012

வரதட்சணை

அம்பாள் கொடுப்பது வரம்
அதற்கு நாம் அன்பாய்க் கொடுக்கிறோம் தட்சணை !!!
குடும்பம் தலைத்தோங்க வரம் தர வரும்
இந்த அம்மனிடம் மட்டும் ஏன் கேட்கிறோம் தட்சணை ???
மாறவேண்டும் இந்த ம(ப)ணமுறை
மாற்றவேண்டும் வருகிற தலைமுறை !!!

Thursday, 17 May 2012

வெயில்

வெப்பக் கதிர்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை
தாக்கத்தின் கொடுமை "சன்"னுக்கு புரிவதில்லை !!!
வெளிச்சம் கொடுக்கும் ஒளி வெள்ளம்   
உனக்கேன் இந்த சுட்டெரிக்கும் உள்ளம் ???

Sunday, 13 May 2012

தாய்

தண்ணீர் குடிக்க மறந்தாலும்
தாயைக் கவனிக்க மறவாதே !!!

அம்மா

நிதானமான உணவு
நிம்மதியில்லா நித்திரை
கடினமான வலி
கனிவான கவனிப்பு
கருவறையிலுள்ள கருவுக்காக !!!
அன்பான அணைப்பு
ஆரோக்கியமான பாலூட்டு
இனிமையான தாலாட்டு
சிரத்தையோடு சீராட்டு
அழகான கைக்குழந்தைக்காக !!!
தவழ்வதை ரசிப்பது  
நடக்க பழக்குவிப்பது  
பேச பயிற்றுவிப்பது
சரியான உணவளிப்பது  
வளரும் பருவத்தில் !!!
பழக்கவழக்கம் பரிசளித்து
பள்ளிசெல்லப் பழக்கி
உடல்நலம் பேணி
ஒழுக்கத்தை அடித்தளமாக்கி
வாழ்க்கையில் வழிகாட்டுவது 
பள்ளிப் பருவத்தில் !!!
மனப்போக்கில் கட்டுப்பாடு
அளவான அறிவுரை 
தெளிவான சிந்தனை 
சிறப்பான செயல்பாடு
பண்பாட்டை வலியுறுத்துவது 
இளமைப் பருவத்தில் !!!
குடும்பத்தின் பெருமை
பொறுமையின் உரிமை  
அரவணைக்கும் அருமை 
பாசத்தின் இனிமை
கண்டிப்பின் வலிமை
முதுமைப் பருவத்தில் !!!
பலவேறு பரிமாணத்தில்
ஆண்டவணனின் பலமுகமாய்
பகலிரவு பாராமல்
தனக்கென வாழாமல்
மகர்கென வாழும் 
மனித தெய்வம் அன்னை !!!
தாயின் கண்ணில்
தவறியும் நிரில்லாமல் 
மனம்நிறை மகிழ்ச்சியை 
மறவாமல் நிறைப்பது
நம் கடமை !!!
பசியில்லாமல் வளர்த்த
அமுதசுரபியான அன்னை
வாய் சோற்றுக்காக
கலங்கக் கூடாது கண்ணை   !!!
நாம் நிம்மதியாய் தூங்கத்தன்  
மடியை படுக்கையாக்கியது தாய்
வயோதிகத்தில் வாழ்விடம்
தேடி அலையவிடாமல்
தன்மடியில் வாழவைக்கணும் சேய் !!!
அன்னை நம் வாழ்க்கை !!!
அன்னை நம் உயிர் !!!
அன்னை நம் தெய்வம் !!!

Friday, 11 May 2012

பாதம்

உடம்பில் எடை  
பூமியில் தடை
தாங்கும் இடை !!!

Sunday, 6 May 2012

பாதி


அன்பு பாதி அறிவுரை பாதி
நம்பிக்கை பாதி நல்லுழைப்பு பாதி
சந்தோசம் பாதி சங்கடம் பாதி
உணவு பாதி உடற்பயிற்சி பாதி
புரிந்துதவி பாதி புண்ணியம் பாதி
மருந்து பாதி மனக்கட்டுப்பாடு பாதி
உறவு பாதி உரிமை பாதி
அவள் பாதி அவன் பாதி
சரி பாதி !!! சரிவில்லா வாழ்வு !!!

Monday, 30 April 2012

மே தினம்

வருடத்தில் ஒரு தினம்
வருமானம் கொடுப்பதை  வாழ்த்தும் சனம்
மே மாதம் முதல் தினம்
மேன்மையான உழைப்பை நினைக்கும்  கணம்
சித்திரையில் ஒரு தினம்
சிகரம் தொட உழைக்க நினைக்கும் மனம் 
உழைப்பாளர்களுக்கு ஒரு தினம்
உழைத்தால் நிச்சயம் கிடைக்கும் பணம்
கடின உழைப்பு !!!   கஷ்டமில்லா வாழ்வு !!!
உண்மையான உழைப்பு !!!   உயர்வான வாழ்வு !!!
உழைப்போம் !!!   உச்சியைத் தொடுவோம் !!!

Friday, 27 April 2012

மே தினம்

வாழத் தேவை குருதி  
உழைக்கத் தேவை உறுதி !!!  
வாழ்க்கைக்குத் தேவை தனம்  
உழைப்புக்குத் தேவை மேதினம் !!!

Thursday, 26 April 2012

ஜெ.ஜெயலலிதா

நடிகையாய் முதலில் அறிமுகமாகி 
ரசிகர்கள் மனதில் ரதிமுகமாகி  
மக்கள் திலகத்தின் மறுமுகமாகி
தமிழகம் முழுதும் தனிமுகமாகி
எதிரிகள் நடுங்க எரிமுகமாகி 
முழு வெற்றிக்கு உயிர்முகமாகி
ஜொலிக்கும் தமிழகத்தின் தங்கமுகம் !!!

Monday, 9 April 2012

விடுங்க

புகை பிடித்தலை விடுங்க
புற்றுநோய் வருதலைத் தடுங்க
மதுக் குடித்தலை விடுங்க
உடல் அழிதலைத் தடுங்க
விலைமாது தொடுதலை விடுங்க
எய்ட்ஸ் அணைத்தலைத் தடுங்க
கெட்டப் பழக்கத்தை விடுங்க
வரும் கெடுதலைத் தடுங்க
குடும்பத்துக்கு நல்ல வாழ்க்கை கொடுங்க !!!

Thursday, 5 April 2012

பரதேசி

பயணிக்க நல்ல வாகனம் தேவையில்லை
கால்களே சிறந்த சக்கரம் இந்த மனிதருக்கு
உடுக்க உடை தேடாது இந்த உடம்பு
தன் தோலையே உடுப்பாய் நினைக்கும் இவர் மனது
விதவிதமாக உணவுகள் பல கிடைத்தாலும்
ருசிக்கு முக்கியம் கொடுக்காது இவர் நாக்கு  
குடும்ப உறவுகள் ஆயிரம் இருந்தாலும்
அனைத்து உயிரையும் தன் உறவாகக் கருதும் இனம்
வாழ்வில் பிடிப்பில்லாமலும்
இன்ப துன்பங்களை சுவைக்காமலும்
நடந்த தூரத்தை நினைக்காமலும்
நடக்கும் தூரத்தை கருதாமலும்
தேசமெங்கும் திரிந்து சென்று
இவர் தேடுவது தான் என்ன ???
செய்யும் காரியமோ உண்டாக்கும் சிரிப்பு
அதில் உள்ளர்த்தமோ ஆயிரம் இருப்பு
மற்றவர்களின் பதிலோ சுடும் நெருப்பு 
அனைத்தையும் சகித்துக் கொள்வது இவரின் தனிச்சிறப்பு
எளிதாகப் புரிய முடியாத புத்திசாலிகளோ ???

பரதேசி எனப் பலகுரல் திட்டினாலும்
பாராட்டாய் பட்டமாய் எடுத்துக் கொண்டு
பகலிரவு பாராமல் நினைவை நிலைப்படுத்தி
ஆண்டவனுக்கு அரும் தொண்டாற்றிடும்
ஆண்டவனின் அருட்ப் பிள்ளைகளோ ???

Sunday, 1 April 2012

தேவர் இனம்

வீரத்தை விதைப்பவர்கள்
வேலியாய்க் காப்பவர்கள்
பயத்தை வேரருப்பவர்கள்
பகையாளியைக் கருவறுப்பவர்கள்
வேங்கையை மிஞ்சியவர்கள்
வேலால் மிரட்டுபவர்கள்  
அடிமைத்தனத்தை  அறுப்பவர்கள்
அன்புக்குப் பணிபவர்கள்
எவனுக்கும் பயமில்லை !!! எமனுக்கும் பயமில்லை !!!

Monday, 19 March 2012

செருப்பு

பாதங்கள் முத்தமிடவில்லையென்றால் பயணிக்காது 
முத்தமிட்ட நன்றிக்காகப் பாதங்களைப் பிணியாக்காது !!!

பேருந்து ஓட்டுனர்

விசிலடித்தால் மட்டுமே
வேலை நடக்கும் இவரிடம் !!!

வார்த்தைகள்

நம் தரத்தை மற்றவர் அளக்க உதவும் அளவுகோல்
அடுத்தவரின் மனக் கதவைத் திறக்க உதவும் திறவுகோல் !!!

Friday, 9 March 2012

திருட்டு

அன்பைத் திருடும் சந்தேகம் 
அறிவைத் திருடும் ஆத்திரம்
நட்பைத் திருடும் தவறான புரிதல்
ஆரோக்கியத்தைத் திருடும் நோய்
உழைப்பைத் திருடும் சோம்பல்
முன்னேற்றத்தைத் திருடும் முயற்சியின்மை
வயதைத் திருடும் வருடம்
வாழ்க்கையைத் திருடும் மரணம் !!!

Thursday, 8 March 2012

மகளிர் தினம்

பாகுபாடு இல்லாமல் ஆணையும்
பெண்ணையும் கருவில் சுமந்து
உயிர் கொடுத்து உணவு கொடுத்து
சுவாசம் கொடுத்து சுகம் கொடுத்து
வண்ணம் கொடுத்து வளர்ச்சி கொடுத்து
மிகக் கடினமான வலியுடன் பெற்றெடுத்து
இரவு பகல் பார்க்காமல் கண் முழித்து கவனித்து
உண்ணும் உணவில் ஒரு பகுதியை
உணவாக உற்பத்தி செய்து பாலாக
பச்சிளம் குழந்தைக்கு  பக்குவமாய் புகட்டி
அழுகையிலிருந்து அர்த்தங்களைப் புரிந்து
நோயிலிருந்து காப்பாற்றி கண்ணேறிலிருந்து காத்து
பேசக் கற்றுக் கொடுத்து
பழகும் முறையைப் பயிற்றுவித்து 
பள்ளிக்குப் போகும் பழக்கத்தை பதியவைத்து
வாழ்க்கையையும் கற்க உதவி செய்து
இளமைப் பருவத்தை கண்ணியமாகவும்
கற்புடனும் கடக்க கண்காணித்து
திருமணத்திருக்கு பின் வாழ்க்கையில் இன்ப
துன்பங்களை பகிர்ந்து துணையாய் நின்று
முழு மனதுடன் முழுதாய் அர்ப்பணித்து
மனித வாழ்க்கையின் துவக்கம் முதல் 
முடிவு வரை வரும் இந்த உன்னதப் பெண் உறவு
ஆண் வர்க்கம் போற்ற வேண்டிய இனிய வரவு
எப்பிறப்பிலும் சிறந்தது பெண்ணின் பிறப்பு
சொல்லி மாளாது இதன் தனிச்சிறப்பு
பெண்களைப் போற்றுவோம் !!!
பெண் உரிமைகளைக் காப்போம் !!!
பெண்களை மேலும் உயர்த்துவோம் !!!
வாழ்த்துவோம் !!! வணங்குவோம் !!!

Wednesday, 29 February 2012

குடை

தற்காலிக நிழல் தரும்
தரு இது வெயில் காலத்தில் !!!
தலை நனையாமல் தடுக்கும்
தலைகீழ் தாமரை இது மழைக் காலத்தில் !!!

Tuesday, 28 February 2012

இழப்பு

வேலை செய்ய மறந்தால்
வருமானம் இழப்பு
கொடுத்த வாக்கு மறந்தால்
மதிப்பு இழப்பு
உடை உடுக்க மறந்தால்
மானம் இழப்பு
உயிர் காக்க மறந்தால்
மனிதம் இழப்பு
உதவி செய்ய மறந்தால்
புண்ணியம் இழப்பு
செய்த நன்றி மறந்தால்
கண்ணியம் இழப்பு  
நல்ல நண்பனை மறந்தால்
மாபெரும் இழப்பு
மூச்சு விட மறந்தால்
உயிர் இழப்பு
நாம் மறப்பதை மறந்தால்
இழப்பை இழக்கலாம் !!!

Sunday, 26 February 2012

சாலையில் விபத்து

ஏதாவது அடி பட்டிருக்கிறதா என்று
தன் வண்டியைச் சுற்றிச் சுற்றி ஆய்வு
வண்டியில் அடிபட்ட உடம்பு துடித்து ஓய்வு
வலி புரியாத வண்டியைத் தடவிக் கொடுத்தல்
வலியால் துடிக்கும் உடம்பை அவமதித்தல்
உயிரற்ற பொருளை பெறலாம் உடைந்தால்  
நேரம் ஆனால் பெற முடியாது உடம்பு சிதைந்தால்
மனித உடம்புக்குக் கொடு முன்னுரிமை
அவர் சந்ததியும் மறவாது உன்னருமை !!! 

Friday, 10 February 2012

கத்தி

கூராக இருக்கும்
சீராகப் பிரிக்கும் !!!

Thursday, 9 February 2012

கொலைவெறி - கொலவெறி

தமிழைக் கொல்வதில் தமிழ் நடிகைகளுக்கு
தமிழர் விவசாயத்தைக் கொல்வதில் கேரளனுக்கு
தமிழனைக் கொல்வதில் சிங்களனுக்கு !!!

காதல்


இளமை வயலில் ஏதோ குறை 
இது வந்ததும் செழிப்பு நிறை !!!

Thursday, 2 February 2012

காதல்

உடலின் அனைத்து உணர்ச்சிகளையும் உணர வைக்கும்
உள்ளத்தின் அனைத்து உணர்வுகளையும் புரிய வைக்கும் !!!

Wednesday, 1 February 2012

இதுவும் காதல் தான்

அன்பு
ஆறுதல்
இன்பம்
ஈர்ப்பு
உரிமை
ஊடல்
எதிர்ப்பு
ஏளனம்
ஐயம்
ஒடுக்கம்  
ஓட்டம்
ஔளோதான்
ஹி ஹி ஹி !!!

Tuesday, 31 January 2012

பயம்

இருக்க வேண்டும் பயம்
மற்றவரைத் துன்புறுத்த 
மற்றவருக்குத் துரோகம் செய்ய !!!

Monday, 30 January 2012

தவறு

தவறு செய்யாத மனிதன் இல்லை
தவறு மட்டுமே செய்தாலும் மனிதன் இல்லை !!!

Sunday, 29 January 2012

நல்லது - வல்லது

நாளை என்பது சோர்வுக்கு நல்லது
இன்றே முடிப்பது வாழ்க்கைக்கு வல்லது  !!!

Saturday, 28 January 2012

கணினி மௌஸ்(mouse)

உள்ளங்கை அசைவுக்கு ஓடோடி வருபவன்
விரல் அழுத்தத்திற்கு விரைந்து செயல்படுபவன்
அம்புக் குறியால்  ஆணையை அமல்படுத்துபவன் !!!

Friday, 27 January 2012

வெற்றி

நேரடி வெற்றி  விடை பெற நேறும்
தோல்விக்குப் பின் வெற்றி தொடர்ந்து ஏறும் !!!

Thursday, 26 January 2012

தேங்காய்

கொண்டை போனால்  
மண்டை உடையும் !!!

Wednesday, 25 January 2012

தமிழ் எழுத்துக்கள்

உயிரெழுத்து - 12 
மெய்யெழுத்து - 18 
உயிர்மெய்யெழுத்து - 216 
ஆயுதயெழுத்து -  1 
அப்ப.....
தலையெழுத்து எத்தனை ???

அறிவுரை

அடுத்தவருக்கு இலவசமாக
யாரும் வழங்கக்கூடிய 
ஒரே பொன்னுரை !!!

Tuesday, 24 January 2012

ஓவியர்

கற்பனையைக் கருவாக்கி
கருத்தை உருவாக்கி
கைவிரலைக் கணையாக்கி 
காகிதத்தைக் களமாக்கி
உருவத்தைப் படைக்கும்
மகத்தான படைப்பாளி !!!

Monday, 23 January 2012

குடியரசு தினம்

இந்நாளில் மக்களாட்சி மலர்ந்தது
மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது
உரிமைகளின் சிறகு விரிந்தது
அடிமைகளின் அழுகை ஒழிந்தது
ஓட்டின்(வாக்கு) வலிமை தெரிந்தது
நிலையான ஆட்சி வந்தது
தேவையை கேட்க முடிந்தது 
ஒவ்வொன்றாய் வந்து சேர்ந்தது
பல்துறை  வளர்ச்சி பணிந்தது
வல்லரசும் வருவதில் இணைந்தது
குடிமக்கள் மனதை அடைந்தது
உழைப்போம் ! உயர்வோம் ! வல்லரசாவோம் !!!பாரதக் குடியரசின் புகழைப் பாரெங்கும் பரப்புவோம் !!!

குடியரசு தினம்


மக்களின் ஆட்சி மலர்ந்த தினம்
ஆள்பவர்களை முடிவு செய்வது மக்கள் மனம்
ஆட்சியில் அமர்ந்த பின் மக்களுடன் சினம்
அரசியல்வாதி எண்ணம் எப்போதும் பணம்
சரியாக வேண்டும் இவர்கள் குணம் !!!

இருக்கணும்

அளவில்லாமல் இருக்கணும் உதவி செய்வதில்
அளவோடு இருக்கணும் உணவு உண்பதில்
சுழியமாக இருக்கணும் துரோகம் இழைப்பதில்
சுறுசுறுப்பா  இருக்கணும் உழைக்கும் நேரத்தில்
கவனமாக இருக்கணும் முடிவு எடுப்பதில் 
கண்டிப்புடன் இருக்கணும் வேலை வாங்குவதில்
பொறுப்புடன் இருக்கணும் பெற்றோர் எதிர்பார்ப்பில்
பாடமா இருக்கணும் சந்ததி படிக்கையில்
வேண்டி இருக்கணும் ஆண்டவன் சன்னதியில் !!!

சிலம்பம்

கம்பின் சுழற்சி
நமக்குப் பயிற்சி
காக்கும் முயற்சி !!!

Sunday, 22 January 2012

சோதனை

சாதனைக்காக !!!

நகம்

முடியும் இடத்தில இருப்பது
உணர்ச்சி நரம்புகளைக் காப்பது
வாழும் வரை வளர்வது
வண்ணம் எதையும் ஏற்பது
விரலுக்கு அழகு சேர்ப்பது !!!

Saturday, 21 January 2012

கணினி சாட்(chat)


புவி முழுதும் புது உறவு 
இன்டர்நெட் மூலம் இனிய வரவு !!!

Friday, 20 January 2012

கண்தானம்

விழி கொடுப்பதில் முழித்திருப்போம்
வீழ்ந்த பின்னும் விழித்திருப்போம் !!!

Wednesday, 18 January 2012

முருகப் பெருமான்

அறுபடை வீடு உடையவர்
அன்பருக்கு அள்ளித் தருபவர்
மலை கடல் அமர்ந்தவர்
மக்கள் பிணித் தீர்ப்பவர்
தமிழர்க்கு மட்டுமே உரியவர்
தன்னிகரில்லா இளையவர் !!!

Thursday, 12 January 2012

முயற்சி

தினமும் முழிப்பதற்கு எடுக்கும் முயற்சி  முதல் வெற்றி
அடுத்தடுத்த முயற்சிகளில் பெறலாம் அடுக்கடுக்காய் வெற்றி
முயற்சி செய்க! முறையான வழியில்! மூச்சு இருக்கும் வரை !!!

Wednesday, 11 January 2012

மாட்டுப் பொங்கல்

உழவுக்கு உதவும் உன்னத உறவுக்கு
உழவர்கள் உவகையுடன் உருவாக்கியது !!!

தைப்பொங்கல்


தை மாதம் பிறப்பது
தமிழ் மக்களுக்காக வருவது
புதியதைப் புகுத்தப் புறப்படுவது
இயற்கைக்கு மரியாதை செய்வது
காளைகளுக்கு கௌரவம் அளிப்பது
நண்பர் உறவினர் ஆசியுடன் மகிழ்ச்சியைப் பரிமாறுவது !!!

வியர்வை

ஓ !  உடம்பும் அழுகிறதோ ???

Tuesday, 10 January 2012

மின்சாரம்

உயிர் அற்றதை இயக்கும்
உயிர் உள்ளதை எரிக்கும்  !!!
கண்ணால் காண முடியாது
இது இல்லாமல் இரவு விடியாது !!!

அந்திப் பொழுது

இந்த நேரத்தில் அனைத்தும் அழகுதான்
ஆபத்தானது !!! இளமையே ஜாக்கிரதை !!!

Monday, 9 January 2012

நடிகர் விவேக்

கள்ளிப்பால் எதிர்ப்பு
மூடநம்பிக்கை  ஒழிப்பு
அடிமைத்தன அழிப்பு 
சமுதாயச்சண்டைக்கு நெருப்பு
முன்னேற்றத்திற்கு அழைப்பு  
சிரிப்புக்குப் பொறுப்பு
திரையில் காமெடிக் கல்விக்கூடம் !!!

குப்பைத்தொட்டி

சுற்றுப் புறத்தைச்  சுத்தப்படுத்தும் தொட்டி
மாற்றுப் பெயரில் அழைக்கலாமே - சுத்தத்தொட்டி !!!

லஞ்சம் - கையூட்டு

கையெத்தில்லாமல்
கண்ணியமில்லாமல்
கணக்கில்லாமல்
களவாணி கறக்கும் காசு !!!

Sunday, 8 January 2012

கண்தானம்

கண் மறுக்காது மற்றொரு
உடம்புடன் பணிசெய்ய !!!
மனம் ஒத்துக் கொண்டால்
கண்தானம் செய்ய !!!

மண்பானை

யாரவது கைவிட்டால்
உயிரையே விட்டுவிடும் !!!
பெண்களை விடத் தன்மானமோ ???

Saturday, 7 January 2012

குங்குமப் பொட்டு

இரத்தத்திலிரிந்து தயாரிக்கபட்டதோ ?
இரத்தத்திற்குச் சமமான மரியாதை
சுமங்கலிப் பெண்ணிடமிருந்து !!!

கணினி சாப்ட்வேர் log

ஏதாவது log  இருக்கிறதா
நம் வாழ்க்கைக்கு !!!
ஏதாவது தவறு நேர்ந்தால்
பார்த்து சரி செய்ய !!!

Friday, 6 January 2012

தலைமுடி

தலையில் இருக்கும் போது அலங்காரம்
இல்லாதவர்கள் மனதில் பெரும் பாரம் !!!
இளமையை அளப்பதற்கு இதுவும் ஒரு அளவுகோல்
கல்யாண வீட்டுக்கு இதுவும் ஒரு திறவுகோல் !!!

Thursday, 5 January 2012

நம்பிக்கை

வலக்கையா?
இடக்கையா?
தும்பிக்கையா?
இது வெறும் கையல்ல
வெற்றிக்கு உதவும் கை

இது விடும் கையல்ல
விட்டதைப் பிடிக்க   உதவும் கை
இது விலக்கும் கையல்ல
நல்லவற்றை இழுக்கும் கை  

இது அடிக்கும் கையல்ல
வாழ்க்கையை அணைக்க உதவும் கை
இது தாக்கும் கையல்ல
வாழ்க்கையின் விளிம்பில் இருப்பவர்களைக் காக்கும் கை
கண்ணுக்குத் தெரியாதது
கடவுளுக்கு இணையானது !!!

Wednesday, 4 January 2012

காதல் கல்யாணம்

இளமை எனும் பாதையில் நடந்த போது
நட்பு எனும் ஏரி குறுக்கிட
நண்பர்கள் எனும் சந்திப்பில் இணைய
காதல் எனும் படகு ஈர்க்க
காதல் பயணம் ஆரம்பமானது ஏரியில்
அற்புதமான  பயண முடிவில் அடையுமிடம்
கல்யாணம் எனும் நந்தவனம் !!!

Tuesday, 3 January 2012

பேருந்து நடத்துனர்

இவர் கொடுத்தால் மட்டும்
கிழிந்த துண்டுச் சீட்டுக்குக்
கூடத் துட்டுக் கொடுப்போம் !!!

கண்ணாடி

அழகைக் கூட்ட உதவுவதில் முதலில் இது
தினமும் இதைப் பார்க்காத முகம் எது ???

Monday, 2 January 2012

தலையணை

அடிக்கவும் அணைக்கவும் !!!

Sunday, 1 January 2012

விநாயகப் பெருமான்

கிழக்குப் பார்க்க அமர்ந்தவர்
கிறங்கா மனம் கொண்டவர்
விக்கி போட வைப்பவர்
வினையைத் தீர்க்க விரைபவர்
பொறுமையைக் கற்றுத் தருபவர்
பெருமையைப் பெற்றுக் கொடுப்பவர்
முதற்கடவுள் !!! மூத்தவர் !!! முன்னிருப்பவர் !!!

பூத்தது புதியது

பூத்தது புதியது
இணைந்தது இனியது
வருவது வளமது
தருவது தனமது
சூழ்வது  சுகமது !!!